அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 30 நிமிட இசை நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். இதற்கான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவருக்கு ஆதரவாக 30 நிமிட இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
இதன்மூலம் தெற்கு ஆசியாவில் இருந்து கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முதல் சர்வதேச இசைக்கலைஞரானார் ஏ.ஆர். ரஹ்மான். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஆசிய-அமெரிக்க மற்றும் பசிஃபிக் விக்டரி ஃபண்டு (ஏஏபிஐ) அமைப்பு, ஏ.ஆர். ரஹ்மானின் இந்த 30 நிமிட இசை நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டது.
அரசியல் அமைப்பான ஏஏபிஐ, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் வாக்குரிமை பெற்றுள்ள ஆசிய-அமெரிக்க வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாகப் பேசியுள்ள ஏஏபிஐ அமைப்பின் தலைவர் சேகர் நரசிம்மன், `அமெரிக்காவில் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்துக்காக நிற்கும் தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலில் இந்த நிகழ்ச்சியின் வழியாக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்’ என்றார்.
ஏஏபிஐ அமைப்பின் யூடியூப் சேனலில் நேற்று (அக்.13) இரவு 8 மணி அளவில் ஏ.ஆர். ரஹ்மானின் 30 நிமிட இசை நிகழ்ச்சியின் காணொளி வெளியானது. இதில் சிங்கப்பெண்ணே, ஜெய் ஹோ, தேரே பினா உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. இதில் பாடகி சின்மயி, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.