ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகவும், அந்நாட்டின் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராகவும் கடந்த டிசம்பர் 28 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பெரும் கலவரம் வெடித்தது. போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈரானின் பல பகுதியில் வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
ஜென் ஸி போராட்டம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமேனியும், அத்பர் மசூத் பெசேல் கியானும் பதவி விலக வேண்டும் என்று ஜென் ஸி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசுக்கு எதிராக இளைஞர்கள் மட்டுமன்றி, வணிகர்கள், குர்து, பலூச் இன மக்கள் உள்ளிட்ட பலரும் போராடி வருகிறார்கள். அந்நாட்டில் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவமும் களமிறக்கப்பட்டு, சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்நிலையில், ஈரானில் நிலவும் வன்முறைச் சூழல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும் 147 பேர் அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும் 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் ஊடகங்கள் முடக்கம்
இதற்கிடையில் ஈரான் இன்டர்நேஷனல் என்ற இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ஈரானில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம். இதனை அரசு தரப்பு மறைக்கப் பார்க்கிறது. ஈரானில் இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொன்லாட் டிரம்ப் சிபிஎஸ் நியூஸ் செய்தியாளருக்கு நேற்று பேட்டியளித்தபோது “ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசு தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்களைத் துன்புறுத்தினால் ஈரான் பார்க்கக் கூடாதவற்றைப் பார்க்கும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஈரானிய போராளிகளே, தொடர்ந்து போராடுங்கள். அரசு கட்டமைப்புகளைக் கைப்பற்றுங்கள். உங்களை அச்சுறுத்துபவர்களை அடையாளம் கண்டு வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள். உங்களுக்கான உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
As anti-government protests in Iran intensify, more than 2,500 people have reportedly died so far.