உலகம்

ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்வு: டிரம்ப் | H-1B Visa | Donald Trump |

"ஹெச்-1பி விசா திட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்."

கிழக்கு நியூஸ்

அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவை விண்ணப்பிக்க நபர் ஒருவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலரை ஆண்டுக் கட்டணமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா திட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைத்துப் பணியமர்த்த நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றன. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேருக்கு ஹெச்-1பி விசா விண்ணப்பிக்க முடியும். ஒரு முறை விண்ணப்பித்தால், மூன்று ஆண்டுகள் வரை அது நடைமுறையில் இருக்கும். இது தவிர 20 ஆயிரம் பேருக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்களுக்காக இந்த 20 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹெச்1-பி விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் அதிகளவில் பணிபுரிந்து வருபவர்கள் இந்தியர்கள். அரசு தரவுகளின்படி கடந்தாண்டு ஒப்புதல் பெற்றவர்களில் 71 சதவீதத்தினர் இந்தியர்கள். இரண்டாவது இடத்தில் 11.7 சதவீதத்தினர் சீனர்கள் உள்ளார்கள்.

2025 முதல் பாதியில் அமேசான் மற்றும் ஏடபிள்யுஎஸ் இணைந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசாக்களுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மைக்ரோசாஃப்ட் மற்றும் மெடா தலா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசாக்களை பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய நடைமுறைப்படி ஹெச்-1பி விசா பணியாளர்களை லாட்டரி முறையில் பதிவிட நிறுவனங்கள் 215 அமெரிக்க டாலரைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஐ-129 விண்ணப்பபடிவத்துக்காக கூடுதலாக 780 அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, ஒரு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தின் ஆண்டுக் கட்டணம் 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைப்பதை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளும். ஹெச்-1பி விசா மூலம் அதிகளவில் இந்தியர்கள் இருப்பதால், இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்களுக்கே இது பெரும் இடியாக மாறியுள்ளது.

இதுதொடர்புடைய பிரகடன உத்தரவில் கையெழுத்திட்டுள்ள டிரம்ப், "ஹெச்-1பி விசா திட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டுள்ளார். இது செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல் 12 மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு, மேற்கொண்டு நீட்டிக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்.

H-1B Visa | Donald Trump | USA | US | United States of America |