அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸுக்குச் சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் நியூ ஷெப்பர்டு விண்கலத்தில், பெண்கள் மட்டுமே அடங்கிய குழு வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்டு தானியங்கி விண்கலத்தில் 6 பெண்களைச் சுமந்துகொண்டு உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் விண்ணை நோக்கி ராக்கெட் கிளம்பியது.
பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி, ஜெஃப் பெஸோஸின் காதலி லாரௌன் சான்செஸ், பத்திரிகையாளர் கெய்லி கிங், வழக்கறிஞர் அமாண்டா குயென், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா போவே, படத் தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் தானியங்கி விண்கலத்தில் இருந்தனர்.
பூமியில் இருந்து புறப்பட்ட விண்கலம், ஏறத்தாழ 100 கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணித்து புவிவட்டப் பாதையை அடைந்தது. பூமிக்கும் விண்வெளிக்கும் இடைப்பட்ட கார்மன் எல்லைக்கோட்டுக்கு அருகே பயணித்து புவி ஈர்ப்பு விசையின்மையை உணர்ந்த பெண்கள் குழு, சில நிமிடங்கள் கழித்து பூமிக்குத் திரும்பியது. ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில் டெக்ஸாஸ் பாலைவனத்தில் விண்கலம் தரையிறங்கியுள்ளது.
கடந்த 1963-ல் ரஷ்ய விண்வெளி வீராங்கனை வேலண்டீனா டெரெஷ்கோவா, தனி ஆளாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அது நடந்து சுமார் 62 ஆண்டுகள் கழித்து தற்போது பெண்கள் மட்டுமே அடங்கிய குழு விண்வெளிக்குப் பயணித்துத் திரும்பி சாதனை படைத்துள்ளது.
இது ஃப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் 11-வது வெற்றிகரமான விண்வெளிப் பயணமாகும். விண்வெளி ஆராய்ச்சியில் இது பெண்களுக்கான ஒரு மைல்கல் தருணம் என்று இந்த பயணம் குறித்து ஃப்ளூ ஆர்ஜின் விவரித்துள்ளது.