டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசால் பிற நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான வரிகள் சட்டபூர்வமானவை அல்ல என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடினார்.
இதைத் தொடர்ந்து இத்தகைய தீர்ப்பு தவறானது என்பதை குறிப்பிட்ட டிரம்ப், வரிகள் நடைமுறையில் உள்ளதாகக் கூறினார்.
அதிபர் டிரம்பால் விதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (ஆக. 29) தீர்ப்பளித்தது. அமெரிக்க அதிபரின் பொருளாதார கருவிகளில் ஒன்றான வரி விதிப்பிற்கு எதிரான இந்த தீர்ப்பு அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் வரிகள் – அமெரிக்க நீதிமன்றம் கூறியது என்ன?
தனது வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் டிரம்ப் அறிமுகப்படுத்திய `பரஸ்பர’ வரி விதிப்பையும், அதற்கும் முன்னதாக பிப்ரவரியில் சீனா, கனடா மற்றும் மெக்ஸிகோ மீது தனித்தனியாக விதிக்கப்பட்ட வரிகளையும் முன்வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரிகளை விதித்ததன் மூலம் தனது அதிகாரத்தை டிரம்ப் மீறியதாக தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பெடரல் சர்க்யூட்டுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது. வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் வரி வதிப்பை ஒரு கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலையின்போது அதிபருக்குப் பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், வரிகளை விதிப்பதற்கும், இதுபோன்ற வரிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரங்கள் இல்லை என்று தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப் கருத்து
`அனைத்து வரிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன! பாகுபாடான ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிகளை நீக்க வேண்டும் என இன்று தவறாகக் கூறியுள்ளது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும்,’ என்று தன் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.