உலகம்

ஷேக் ஹசீனாவின் அடுத்த திட்டம் என்ன?: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து அவருடைய மகன் சஜீப் வாஜெத் ஜாய் விளக்கமளித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம், மாபெரும் கிளர்ச்சியாக மாறியதைத் தொடர்ந்து அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார்.

இவர் பிரிட்டன் செல்ல விரும்புவதாகவும் இதற்கு பிரிட்டனிலிருந்து அனுமதி கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக பல்வேறு வதந்திகள் வரும் நிலையில், ஷேக் ஹசீனா இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என அவருடைய மகன் ஜாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டு வருவதாக நேர்காணல் ஒன்றில், அவருடைய மகன் ஜாயிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தஞ்சமடையத் திட்டமிட்டு வருவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. ஷேக் ஹசீனா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சில நாள்கள் தில்லியில்தான் தங்கவுள்ளார். அவர் வங்கதேசத்தைவிட்டு வெளியேறுவதை எண்ணி எனக்குக் கவலையில்லை. வங்கதேசத்தைவிட்டு வெளியேறுவதில் அவருக்கு விருப்பமில்லை. இது அரசியல் இயக்கம் அல்ல. அவர்கள் உங்களைக் (ஷேக் ஹசீனா) கொல்லப்போகிறார்கள் என்று சமாதானப்படுத்த வேண்டியிருந்தது" என்றார்.

மேலும், "பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி ஒரு நாள் முன்பே அவர் முடிவெடுத்துவிட்டார். ராஜினாமா செய்யவுள்ளது சிலருக்கு மட்டுமே தெரியும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் கைமாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் அவருடையத் திட்டம்.

ஆனால், போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை நோக்கி வருவதை அறிந்தவுடன், இனி நேரம் கிடையாது என்று கூறி பயந்து உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றோம்.

ஷேக் ஹசீனா தற்போது தில்லியில் நலமுடம் உள்ளார். என் சகோதரி அவருடன்தான் உள்ளார். என் சகோதரி தில்லியில்தான் வசிக்கிறார். அவரும் நலமுடன் உள்ளார். ஆனால் மிகுந்த கோபத்தில் உள்ளார்" என்றார்.