காஸாவில் முதற்கட்டமாகக் காலையில் 7 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்த நிலையில், 2-ம் கட்டமாக மீதமுள்ள 13 கைதிகளை விடுவித்ததாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். லட்சக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக 20 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கை டிரம்பால் முன்வைக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த அக்டோபர் 11 போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து தங்கள் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளில் முதற்கட்டமாக 7 பேரை விடுவிப்பதாக இன்று காலை ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. விடுவிக்கப்பட்டவர்கள் இஸ்ரேலின் செஞ்சிலுவை அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பில் நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 13 பிணைக் கைதிகளைச் செஞ்சிலுவை அமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள். இதன்மூலம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக 2000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பிணைக் கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஹமாஸ் அமைப்பினர் வசம் உயிரிழந்த பிணைக் கைதிகள் 28 பேரின் உடல்கள் இன்னும் உள்ளதாகத் தெரிய வருகிறது.
இதற்கிடையில் இஸ்ரேல் வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டார். அப்போது விருந்தினர் புத்தகத்தில் ”இது தனக்கான பெரும் கௌரவம்” என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட்டார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த முன்னெடுப்புக்குப் பிறகு அவர் முதன்முறை இஸ்ரேல் சென்றுள்ளார். ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள டிரம்ப், அதன் பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக் கைதிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நலம் விசாரித்தார்.