சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளதால், அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத் தப்பியுள்ளார். இதனால் கடந்த 14 வருடகாலமாக அந்நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2000-ல் சிரிய நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார் அந்நாட்டின் பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல் அசாத். அவரது 10 ஆண்டுகால அடக்குமுறை ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை அடுத்து, கடந்த மார்ச் 2011-ல் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தனர். அசாத் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் மக்கள் பேரணி நடைபெற்றது.
ராணுவத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் போராட்டத்தை அரசு ஒடுக்கியது. இதைத் தொடர்ந்து `ஃப்ரி சிரியன் ஆர்மி’ என்ற பெயரில் ஆயுதக்குழுவை அமைத்து, அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை தொடங்கினர் கிளர்ச்சியாளர்கள். மேலும் அந்நாட்டின் நான்கில் ஒரு பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சென்றது.
இந்நிலையில், சர்வாதிகாரி பஷார் அல் அசாதின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியதாக, கிளர்ச்சியாளர்கள் குழு இன்று (டிச.7) அறிவித்தது. டமாஸ்கஸில் நேற்று நடைபெற்ற முழு வீச்சிலான கிளர்ச்சியாளர்கள் குழுவின் முற்றுகையை தொடர்ந்து, விமானம் மூலம் தப்பியுள்ளார் அதிபர் பஷார் அல் அசாத். ஆனால் அவர் எந்த இடத்திற்கு சென்றுள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியதும், அங்கிருந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்துள்ளது கிளர்ச்சியாளர்கள் குழு. மேலும், கிளர்ச்சியாளர்கள் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் முஹமத் காஸி அல் ஜலாலி அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இத்தனை வருடகாலமாக அதிபர் அசாத்திற்கு ஆதரவு வழங்கி வந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு தங்களது படைகளை அந்நாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டுடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள இஸ்ரேல், சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
அதிபர் பஷார் அல் அசாத் தப்பியுள்ளதால், அந்நாட்டில் கடந்த 24 வருடகாலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.