உலகம்

வங்கதேச ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்முறையாக யூனுஸை சந்தித்த பிரதமர் மோடி!

ஜனநாயகப் பூர்வமான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராம் அப்பண்ணசாமி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் பிம்ஸ்டெக் உச்ச மாநாட்டிற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசுமுறைப் பயணமாக சீனாவிற்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட முஹமது யூனுஸ், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக ஊடகத்திடம் விளக்கமளித்த இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, `ஜனநாயகப் பூர்வமான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களை மையமாகக் கொண்ட இரு நாட்டு உறவுகளை இந்தியா நம்புகிறது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களும் உறுதியான நன்மைகளை வழங்கியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, இதற்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சொல்லாடலையும் தவிர்ப்பது நல்லது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அதோடு, இரு நாட்டு எல்லைப் பகுதி வழியாக, மிகவும் குறிப்பாக இரவு நேரத்தில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி நுழைவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்தும் பிரதமர் பேசினார்’ என்றார்.

மேலும், வங்கதேசத்தில் இருக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போது முதல்முறையாக முஹமது யூனுஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.