REUTERS
உலகம்

24 வருடங்களுக்குப் பிறகு வட கொரியா சென்ற ரஷ்ய அதிபர் புதின்!

உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர தங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது ரஷ்யா

ராம் அப்பண்ணசாமி

24 வருடங்களில் முதல் முறையாக வட கொரியாவுக்குச் சென்றுள்ளார் ரஷ்ய அதிபர் புதின். உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரில் அதற்கான ஆயுத உதவிகளை வட கொரியா கொடுத்து வருகிறது என உலக நாடுகள் குற்றச்சாட்டிவரும் நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ஜூன் 19 அதிகாலையில் வட கொரியத் தலைநகர் பியோங்யாங் விமான நிலையத்தில் வந்திறங்கினார் புதின். புதினுக்கு ரஷ்ய அரசு சார்பில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளித்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். கடைசியாக செப்டம்பர் 2023-ல் இந்த இருவரும் கிழக்கு ரஷ்யாவில் நேரடியாகச் சந்தித்துக் கொண்டனர்.

`உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர தங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் உபயோகிக்கத் தேவைப்படும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குத் தருகிறது வட கொரியா. ஈரானிடம் பெற்ற டிரோன்கள் உட்பட பல ஆயுதங்களை (உக்ரைன்) மக்கள் மற்றும் குடியிருப்புகள் மீது ரஷ்யா உபயோகப்படுத்தி வருகிறது’ என இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க உள்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தில் ரஷ்யாவின் ராணுவ அமைச்சர் ஆண்ட்ரேய் பெலௌசௌ, வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் புதினுடன் சென்றனர். வட கொரியா மேற்கொண்டு வரும் ஆயுத சோதனைகள் மற்றும் தென் கொரியா மேற்கொண்டு வரும் ராணுவ கூட்டுப் பயிற்சிகள் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது.

வடகொரியாவைத் தொடர்ந்து, ஜூன் 19-ல் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குச் செல்கிறார் புதின். புதின் வியட்நாம் செல்வது குறித்து ஏற்கனவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தது அமெரிக்கா.