கோப்புப்படம் 
உலகம்

பாகிஸ்தான் மீது தாக்குதல்: 58 ராணுவ வீரர்களைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் தகவல்! | Afghanistan | Pakistan |

23 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் 58 பேரைக் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அதேசமயம், 23 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கடந்த வாரம் குற்றம்சாட்டியது. இதற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை. கடந்த சில நாள்களாகவே எல்லையில் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை காபுலிலுள்ள தெரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதற்கு தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் மீது சனிக்கிழமை இரவில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

"ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே நேற்றிரவு நடந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 58 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 30 பேர் காயமடைந்துள்ளார்கள். குறிப்பிட்ட அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சண்டையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தார்கள். 16 பேர் காயமடைந்தார்கள். கத்தார் மற்றும் சௌதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தச் சண்டையானது நிறுத்தப்பட்டது" என்றார்.

தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை காலை கூறியதாவது:

"எல்லையில் பதிலடி கொடுத்து வெற்றிகரமான ஆபரேஷன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க நம் ராணுவப் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்துக்குள் நுழைந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாகவே பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து டிடிபி பாகிஸ்தான் அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. கடைசியாக அக்டோபர் 8 அன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்திய தாக்குதலில் இரு மூத்த அதிகாரிகள் உள்பட 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், தலிபான்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது.

Pakistan | Afghanistan | Taliban | Pakistan Soldiers |