அமெரிக்க அதிபர் தேர்தலில் 312 தேர்வர்கள் வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப். கடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்றதைவிட அதிக தேர்வர்கள் வாக்குகளை பெற்று, இந்த வெற்றியை அவர் சாத்தியப்படுத்தியுள்ளார்.
கடந்த நவ.5-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், வெற்றிக்குத் தேவைப்படும் 270 தேர்வர்கள் வாக்குகளை நவ.6 மாலையில் டிரம்ப் பெற்றிருந்தாலும், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகின.
இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. இதன்படி, இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 50.5 சதவீதத்தைப் பெற்ற டிரம்புக்கு, 312 தேர்வர்கள் வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் 47.92 சதவீத வாக்குகள் பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 226 தேர்வர்கள் வாக்குகள் கிடைத்தன
இந்த வாக்கு எண்ணிக்கையில், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில், 31 மாகாணங்களைக் கைப்பற்றினார் டிரம்ப். கமலா ஹாரிஸுக்கு (தலைநகர் வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட) 19 மாகாணங்கள் மட்டுமே கிடைத்தன.
மேலும், ஊசல் மாகாணங்கள் அல்லது போர்க்கள மாகாணங்கள் என்று அழைக்கப்படும் அரிசோனா, ஜார்ஜியா, மிஷிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளார் டிரம்ப். இந்த 7 மாகாணங்களில் உள்ள 93 தேர்வர்கள் வாக்குகள் டிரம்பின் வெற்றிக்குப் பெரிது உதவியுள்ளன.
கடந்த 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் தலா 25 மாகாணங்களை வென்றனர். ஆனால் ஜோ பைடனுக்கு 306 தேர்வர்கள் வாக்குகளும், டொனால்ட் டிரம்புக்கு 232 தேர்வர்கள் வாக்குகளும் கிடைத்தன. கடந்த முறை அரிசோனா, ஜார்ஜியா, மிஷிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 6 ஊசல் மாகாணங்கள் பைடனின் வெற்றிக்கு உதவின.
2020 தேர்தலை ஒப்பிடும்போது, ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்திலும் இந்த முறை குடியரசுக் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்த 2024 தேர்தலில் கமலா ஹாரிஸை விட சுமார் 40 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றியை பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.