https://x.com/BrunoRguezP
உலகம்

அரசை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம்: அமெரிக்காவில் நடப்பது என்ன?

தனது அதிகாரத்தை அதிபர் துஷ்பிரயோகம் செய்வதையும், கலிபோர்னியா தேசிய காவல்படை துருப்புக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதையும் நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராம் அப்பண்ணசாமி

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலிபோர்னியா மாகாணத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியேறியுள்ள அனைவரையும் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் கடந்த 3 நாள்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் போராட்டம் கலவரமாக மாறி கடைகள், வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டுமே சுமார் 700 கடற்படை வீரர்களை பாதுகாப்புப் பணியில் அமெரிக்க இராணுவம் நேற்று (ஜுன் 9) ஈடுபடுத்தியுள்ளது. ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய காவல்படையினருக்கு உதவிடும் வகையில் இத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து அமெரிக்க அரசு மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்ட்டா அறிவித்துள்ளார். இத்தகைய எண்ணிக்கையிலான வீரர்களை களமிறக்கியது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும், இது மாநிலத்தின் இறையாண்மையைக் குறை மதிப்பிடும் செயல் என்றும் அவர் கூறினார்.

மேலும், `அதிபர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும், கலிபோர்னியா தேசிய காவல்படை துருப்புக்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதையும் நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்று அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, `நாங்கள் படைகளை அனுப்பியிருக்காவிட்டால் நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறி அமெரிக்க அரசின் செயலை அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.