விபத்துக்குள்ளான பேருந்து  
உலகம்

தென்னாப்பிரிக்கப் பேருந்து விபத்து: 45 பேர் பலி

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வியாழக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். ஈஸ்டர் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் பேருந்தில் சென்றபோது பேருந்து மலைப் பகுதியில்  விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் அண்டை நாடான போஸ்ட்வானாவின் தலைநகரான கபோரோனிலிருந்து ஈஸ்டர் பெருவிழாவை ஒட்டி தேவாலயத்திற்கு பயணித்த யாத்ரீகர்கள் என்று தென்னாப்பிரிக்க வானொலி தெரிவித்துள்ளது. விமானத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8  வயது சிறுமி மட்டும் உயிர்பிழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகோபானே மற்றும் மார்கென் மலைப்பகுதிகளுக்கு இடையே மமட்லகலா என்னுமிடத்தில் விபத்து நடந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து 50 மீட்டர் பள்ளத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்து போயுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல் மீட்கப்பட்டு வருகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிந்திசிவி சிக்குன்கா, அனைத்து உடல்களும் மீட்கப்பட்டபின் போட்ஸானாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.