உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு | Nobel Prize |

குவான்டம் இயற்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்கு கௌரவம்...

கிழக்கு நியூஸ்

இயற்பியலுக்கான 2025 ஆண்டின் நோபல் பரிசு, ஜான் கிளார்க் மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்ட்டினிஸ் ஆகிய விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு கடந்த 1901 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2025 ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அதன்படி, ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவான்டம் இயற்பியல் துறையில் மேற்கொண்ட புதிய சோதனை மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் க்ளார்க், 1942-ல் பிறந்தவர். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1968-ல் முனைவர் பட்டம் பெற்றவர். கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றியவர்.

மைக்கேல் டெவோரெட், 1953-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்தவர். 1982-ல் பாரிஸ் சுட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிசெய்தவர்.

அமெரிக்காவில் 1958-ல் பிறந்த ஜான் மார்டினிஸ், கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் 1987-ல் முனைவர் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் ஆவார்.

நோபல் பரிசு பெற்ற மூவருக்கும் 11 மில்லியன் ஸ்வீடன் குரோனர் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில், ரூ. 10.6 கோடி ஆகும்.