வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள, இந்திய-அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயரின் மகன் ஜோஹ்ரான் மம்தானி, அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வரையில், `பாம்பு எண்ணெய் விற்பனையாளர்’ என்பதில் தொடங்கி `100% கம்யூனிஸ்ட் பைத்தியம்’ என்பது வரை பல்வேறு அரசியல் பிரபலங்களும் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகனான ஜோஹ்ரான் மம்தானி, சிரிய-அமெரிக்க கலைஞரான ராமா துவாஜியை மணந்துள்ளார். கடந்த ஜூன் 24 அன்று நியூயார்க் மேயர் வேட்பாளரை தேர்வு செய்ய ஜனநாயகக் கட்சியில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அவரை `பாம்பு எண்ணெய் வியாபாரி’ என்று நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் விமர்சித்துள்ளார். மேலும், மம்தானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக்கணக்கில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`இறுதியாக அது நடந்ததுவிட்டது, ஜனநாயகக் கட்சியினர் எல்லை மீறியுள்ளனர். 100% கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் தேர்தலில் வென்று மேயராகும் பாதையில் இருக்கிறார். இதற்கு முன்பும் நம்மிடைய தீவிர இடதுசாரிகள் இருந்தனர், ஆனால் இது கொஞ்சம் அபத்தமாகி வருகிறது,
அவர் பயங்கரமாகத் தெரிகிறார், அவருடைய குரல் கரகரப்பாக உள்ளது, அவர் அவ்வளவு புத்தி கூர்மையானவர் இல்லை, போலியானவர்கள் அனைவரும் அவரை ஆதரிக்கிறார்கள், மேலும் நமது ஆகச்சிறந்த பாலஸ்தீன செனட்டர் க்ரையின் சக் ஷூமர்கூட அவரைப் பார்த்து முணுமுணுக்கிறார். ஆம், இது நமது நாட்டின் வரலாற்றில் பெரிய தருணம்’ என்றார்.
மம்தானி அளித்த சாத்தியமற்ற வாக்குறுதிகள், இஸ்ரேல் மீது அவர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் பாலஸ்தீனத்திற்கு அவர் அளித்துள்ள அசைக்க முடியாத ஆதரவு போன்றவற்றால் இத்தகைய விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.