பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய விரும்பவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் குமாரசாமி இன்று (ஜூன் 2) செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
`டெஸ்லாவிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஷோரூம்களைத் தொடங்குவதில் மட்டுமே அவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தி மேற்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை’ என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், ஐரோப்பிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹுண்டாய், பென்ஸ், ஸ்கோடா மற்றும் கியா போன்றவை புதிய மின்னணு வாகனங்கள் கொள்கையின் கீழ் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் தகவலளித்துள்ளார்.
இதற்குப் பிரதான காரணமாக இடது பக்க இயக்கம் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலும் இடது பக்க இயக்க முறை பின்பற்றப்படுவதால், கார்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழவில்லை. ஆனால் அமெரிக்காவில் வலது பக்க இயக்க முறை செயல்பாட்டில் உள்ளது.
மத்திய அரசால் கடந்த 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின்னணு வாகனங்கள் கொள்கையின் (New EV Policy) கீழ், இந்தியாவில் முதலீடு செய்து உற்பத்தி ஆலைகளை அமைக்கும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக, இந்தியாவில் கார் உற்பத்தி ஆலை அமைத்து, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்க டெஸ்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில் அமலில் உள்ள அதிகபட்சமான இறக்குமதி வரி முதலீடு செய்வதற்கு தடையாக உள்ளதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.