ஆக்ஸிம் 4 திட்டத்திற்காக, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இருபத்தெட்டு மணி நேரத்திற்குப் பிறகு, டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 26) சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த முதல் இந்தியர் என்கிற பெருமையை குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா பெற்றார். மேலும், இந்த பயணத்தின் மூலம் போலாந்து மற்றும் ஹங்கேரி நாட்டவர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவது இதுவே முதல்முறை.
1984-ல் சோயூஸ் விண்கலத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா மேற்கொண்ட முன்னோடியான விண்வெளி பயணத்திற்குப் பிறகு, ஏறத்தாழ 41 ஆண்டுகள் கழித்து, இந்த மனித விண்வெளிப் பயணத்தின் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது.
ஆக்ஸிம்-4 குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி, எக்ஸ்பெடிஷன் 73 குழுவினருடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கல்விச் சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும்.
விண்வெளி ஆராய்ச்சியில் வணிக மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளின் வளர்ந்து வரும் பங்கை பிரதிபலிக்கும் வகையில், புற்றுநோய் ஆராய்ச்சி, டிஎன்ஏ பழுதுபார்ப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளில் ஆக்ஸிம் குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில் பறந்து, மணிக்கு 17,000 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் பயணித்த ஆக்ஸிம் குழுவினர், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, நுண் ஈர்ப்பு விசைக்குப் பழகினார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு முன்னதாக விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட உணர்ச்சிபூர்வமான செய்தியில், `விண்வெளியில் இருந்து நமஸ்காரம்’ தெரிவித்த சுக்லா, 1.4 பில்லியன் இந்தியர்களின் நம்பிக்கைகளைத் தனது தோள்களில் சுமந்து செல்வதில் பெருமை அடைவதாக கூறினார்.