ஓபன்ஏஐ புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சாட்ஜிபிடி அட்லஸ் எனும் பிரவுசரால் கூகுள் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர், கூகுள் குரோம். சாட்ஜிபிடியை கொண்டு ஓபன்ஏஐ நிறுவனம் தற்போது சாட்ஜிபிடி அட்லஸ் எனும் புதிய பிரவுசரை இணைய உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஓபன்ஏஐ தலைமைச் செயல் அலுவலர் சாம் ஆல்ட்மேன் இதை செவ்வாயன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பிரவுசர் ஏஐ சார்ந்து இயங்கக்கூடியது. சமீபத்திய ஜிபிடி-5 ஏஐ மாடல் மூலம் சாட்ஜிபிடி அட்லஸ் இயங்குகிறது. கூகுள் குரோம் ஏஐ மோட் மற்றும் பெர்பிளெக்ஸிடி கோமெட் பிரவுசருக்கு போட்டியாக சாட்ஜிபிடி அட்லஸ் சந்தைக்கு வந்துள்ளது.
அட்லஸிலும் மற்ற பிரவுசர்களைப் போல டேப்கள், தேடியதன் குறிப்புகள் எல்லாம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. எந்தவோர் இணையப் பக்கத்திலிருந்தும் ஏஐ உதவிகளைக் கோரலாம். ஏஐ உதவிகள் இருப்பதன்மூலம் தேடுவதற்கான சிரமம், தகவல்களைக் கண்டறிதல், இணையச் செயல்கள் உள்ளிட்டவை மேலும் எளிமையாகும் எனத் தெரிகிறது.
தற்போது மேக்ஓஎஸ்-ல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு வடிவங்களிலும் சாட்ஜிபிடி அட்லஸ் வரவுள்ளது.
ஓபன்ஏஐ-யின் இந்த அறிவிப்பு காரணமாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் தனது சந்தை மதிப்பில் 150 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 4.8% அளவுக்கு சரிவைச் சந்தித்ததாகவும் பிறகு சற்று மீண்டெழுந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆல்ஃபபெட்டின் சரிவானது கடைசியாக 2.4% அளவில் இருந்துள்ளது.
ChatGPT Atlas | OpenAI | Sam Altman |