தொழில்நுட்பம்

சாட்ஜிபிடி நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்த நியூ யார்க் டைம்ஸ்!

பத்ரி

சாட்ஜிபிடி (Chat GPT) எனப்படும் பிரபலமான செயற்கை நுண்ணறிவுத் தள நிறுவனத்தின்மீதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீதும் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் வழக்கு தொடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், பல தரவுகளைப் படித்து, அவற்றிலிருந்து பயின்று, அவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களைத் தரக்கூடியவை. இவ்வாறு தரவுகளைப் படித்துப் புரிந்துகொள்ள, தங்களுடைய மென்பொருளைப் பயிற்றுவிக்க அவர்கள் பிரபலமான செய்தித் தளங்களில் வெளியான செய்திகளையும் பயன்படுத்திக்கொள்கின்றன.

அவ்வாறு தங்களுடைய காப்புரிமை பெற்ற செய்திகளையும் கட்டுரைகளையும் தங்களுடைய அனுமதியின்றி எடுத்துக்கொண்டதாக நியூ யார்க் டைம்ஸ் நிறுவனம் சாட்ஜிபிடி தளத்தை நடத்தும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின்மீதும் அதனுடைய பெரும்பான்மைப் பங்குதாரர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கெனவே வேறு சில நிறுவனங்கள் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடன் ரகசியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. நியூ யார்க் டைம்ஸ், ஓப்பன் ஏஐ நிறுவனத்தைத் தொடர்புகொண்ட நிலையில் அவர்களுக்கிடையில் சரியான ஒப்பந்தம் ஏற்படாத காரணத்தால் இவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க இடமுள்ளது.

இந்திய நிறுவனங்களின் செய்திகளும் கட்டுரைகளும் புத்தகங்களும்கூட இதேபோல் சாட்ஜிபிடியால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம். நியூ யார்க் டைம்ஸ் வழக்கின் தீர்ப்பு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.