மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் காலை 9 மணி அளவில், கஞ்சஞ்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் `கவச் தொழில்நுட்பம்' நிறுவப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்களுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்க மத்திய இரயில்வே அமைச்சகத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட `கவச் தொழில்நுட்பம்’ 2023-ல் செயல்பாட்டுக்கு வந்தது.
கவச் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த ரயில் தண்டவாளத்தில் சென்சார்கள் பொருத்தப்படும். ஒரு ரயில்பாதையில் குறிப்பிட்ட தொலைவில் இரு ரயில்கள் வந்தால் அதைக் கண்டுபிடிக்கும் இந்தத் தொழில்நுட்பம் அந்த ரயில்களின் ஓட்டுனர்களுக்கு ரயிலை நிறுத்துமாறு எச்சரிக்கைத் தகவல் அளிக்கும். ஒரு வேளை உடனடியாகச் செயல்பட்டு ஓட்டுனர்கள் ரயிலை நிறுத்தாவிட்டால், தானியங்கி முறை செயல்பாட்டுக்கு வந்து ரயில் நிறுத்தப்படும்.
மேலும் ரயில்பாதையில் இருக்கும் மஞ்சள், சிகப்பு சிக்னல்கள் குறித்து கவச் தொழில்நுட்பம் ரயில் ஓட்டுனர்களுக்குத் தொடர்ந்து தகவல்களை அளித்துக்கொண்டிருக்கும். மூடுபனி போன்ற மோசமான சூழ்நிலைகளில் ஓட்டுநர்களுக்கு உதவ கவச் திட்டத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2022-ல் கவச் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையைச் சோதனையிட்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், `சோதனைத் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. முன்னால் நிற்கும் ரயிலுக்கு 380.மீ முன்பாகவே கவச் தொழில்நுட்பம் இந்த ரயிலை நிறுத்தியுள்ளது’ என அப்போது தெரிவித்தார். அந்தக் காணொளி இப்போது வைரலாகி வருகிறது.
`கவச் தொழில்நுட்பம் நிறுவப்பட்டிருந்தால், இதைப் போன்ற விபத்துக்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ அதிக செலவுகள் ஏற்படும்’ என ரயில்வே வாரியத்தின் முன்னாள் இயக்குனர் பிரேம்பால் ஷர்மா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஒரு கி.மீ தூரம் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரூ.50 லட்சம் செலவு ஏற்படும் என ரயில்வே அமைச்சகம் முன்பு தெரிவித்தது.
தெலுங்கானாவின் செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள சுமார் 1,500 கி.மீ அளவிலான ரயில்பாதையில் கவச் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 10,000 கி.மீ அளவிலான முக்கிய ரயில் பாதைகளில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1 லட்சம் கி.மீ அளவுக்கான ரயில்பாதை பயன்பாட்டில் உள்ளது.
2023 ஜூன் 2-ல் ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் 2 சரக்கு ரயில்களுடன் மோதி கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.