தொழில்நுட்பம்

செல்போன் கட்டணங்கள் உயர்வு: ஜியோ அறிவிப்பு

இந்தப் புதிய கட்டணங்கள் அனைத்தும் ஜூலை 3 முதல் அமலுக்கும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ராம் அப்பண்ணசாமி

செல்போன் கட்டணங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது ஜியோ. 28 நாட்கள் செல்லுபடியாகும் அடிப்படைத் திட்டத்தின் விலை ரூ. 189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய கட்டணத்தை ஒப்பிடும்போது இது 21.9 % உயர்வாகும். இது போலப் பிற திட்டங்களில் 12 % முதல் 25 % வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 2999 ஆக இருந்த வருடாந்திர திட்டத்தின் கட்டணம், ரூ. 3599 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வருடத்திற்கு ரூ. 600-யை கூடுதலாக வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ப்ரீ-பெய்டு திட்டங்களுக்கு இணையாக போஸ்ட்-பெய்டு திட்டங்களுக்கான கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் தற்போதுள்ள பயனாளர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது எனவும், ஜியோ போன், ஜியோ பாரத் சந்தாதாரர்களுக்கு தற்போது உள்ள கட்டணங்கள் தொடரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் அனைத்தும் ஜூலை 3 முதல் அமலுக்கும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுடன், சில புதிய செயலிகளை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது:

1) ஜியோ சேஃப் – (குவாண்டம் பாதுகாப்பான தொடர்பு செயலி) அழைப்பு, குறுஞ்செய்தி, கோப்புப் பரிமாற்றம் போன்றவற்றுக்காக உபயோகப்படுத்தப்படும். (மாதத்திற்கு ரூ. 199 விலை)

2) ஜியோ ட்ரான்ஸ்லேட் – (AI-வசதியால் இயங்கும் பல மொழித் தொடர்பு செயலி) அழைப்பு, குறுஞ்செய்தி, படம் போன்றவை மொழிபெயர்க்கப்படும். (மாதத்திற்கு ரூ. 99 விலை)

ரூ. 298 மதிப்புள்ள இந்த இரு செயலிகளும் ஜியோ சந்தாதாரர்களுக்கு ஒரு வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5G மற்றும் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகள் மேற்கொண்டு அதன்மூலம் தொழில்துறை கண்டுபிடிப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.