ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ப்ரோபா-3 செயற்கைக் கோள்களை இன்று (டிச.4) விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.
சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்யும் வகையில் 550 கிலோ எடையில் அதி நவீன உபகரணங்களைக் கொண்ட இரட்டை செயற்கைக் கோள்களான ப்ரோபாவை வடிவமைத்தது ஐரோப்பிய யூனியன் அமைப்பின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்.
இந்த ப்ரோபா-3 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம். இதன்படி, இன்று மாலை 4.08 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதள மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ரக ராக்கெட் மூலம் அவை விண்ணில் ஏவப்பட உள்ளன.
முதலில் பூமியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டாரப் பாதையில் நிலை நிறுத்தப்படுகின்றன ப்ரோபா-3 செயற்கைக் கோள்கள். அதன்பிறகு 2 செயற்கைக் கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் பயணித்து, அங்கிருந்தபடி அடுத்த 2 வருடங்கள் ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களையும், தரவுகளையும் பூமிக்கு அனுப்பும் என கூறப்படுகிறது.
ப்ரோபா செயற்கைக்கோள்களில் 2 அதி நவீன உபகரணங்கள் உள்ளன. இதன் மூலம் சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவையும், சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களால் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறன இந்த செயற்கைக்கோள்கள்.