தொழில்நுட்பம்

ஓபன்ஏஐயுடன் கைகோர்ப்பதா?: ஆப்பிள் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

கிழக்கு நியூஸ்

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கைகோர்த்தால், தங்களுடைய நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்து தங்களுடைய சாதனங்களில் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது குறித்த அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. சில செயலிகள் மற்றும் செயல்பாட்டுத் தளங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உள்ளடக்குவதற்காக ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமைச் செயல் அதிகாரியும், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளருமான எலான் மஸ்குக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல் என எக்ஸ் தளப் பக்கத்தில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை ஓபன்ஏஐ நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கைகோர்த்தால், தன்னுடைய நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தால் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாதபோது, பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை ஓபன்ஏஐ மூலம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்பது மிகவும் அபத்தமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆப்பிள் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்கள் வெளிப்படையாகக் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.