பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குச் சொந்தமான வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2022-ல் உலகின் முன்னணி சமூக வலைதளமான டிவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து, ஜூலை 2023-ல் டிவிட்டரின் பெயர் எக்ஸ் என்று அதிகாரபூர்வமாக மாற்றம்பெற்றது.
மேலும், ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டதோடு, ட்விட்டரின் புகழ்பெற்ற நீல நிற குருவி லோகோ நீக்கப்பட்டது. இந்நிலையில், தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏஐ (X AI) நிறுவனத்துக்கு எக்ஸ் சமூகவலைதளத்தை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியில் எக்ஸ் ஏஐ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஓபன் ஏஐ நிறுவனத்தின் போட்டியாளராக இந்த நிறுவனம் கருதப்படுகிறது. இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`எக்ஸ் பங்குகளை எக்ஸ் ஏஐ வாங்கியுள்ளது. எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் (12 பில்லியன் டாலர் கடன்) உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட எக்ஸ் ஏஐ இன்றைக்கு உலகின் முன்னணியான ஏஐ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தரவுகள், மாதிரிகள், விநியோகம் மற்றும் திறமை ஆகியவற்றை இணைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மகத்தான ஆற்றலை உண்டாக்கும். அதே நேரம் உண்மையைத் தேடும் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்திசாலித்தனமான மற்றும் அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்க இது வழி வகுக்கும்.
எக்ஸ் ஏஐ மற்றும் எக்ஸில் உள்ள அனைவரின் கடுமையான அர்ப்பணிப்பையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன், அதுதான் எங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஆரம்பம்தான்’ என்றார்.