தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் சைபர் தாக்குதல் எச்சரிக்கை!

LNK ஃபைல்களை ஓபன் செய்யாமல் இருப்பது, விண்டோஸ் காண்பிக்கும் பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துவது...

கிழக்கு நியூஸ்

மைக்ரோசாப்ட் விண்டோஸில் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் .LNK ஃபைல்களை ஓபன் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் ZDI-CAN-25373 எனும் பாதுகாப்பு குறைபாடு மூலம் தாக்குதல் நடத்த முடியும் என காஸ்பர்ஸ்கை, டிரென்ட் மைக்ரோ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

.LNK எனும் ஃபைல்கள் மூலம் பயனர்களைக் குறிவைத்து சைபர் குற்றவாளிகளால் சைபர் தாக்குதல் நடத்த முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது. .LNK ஃபைல்களில் இதன் பாதிப்பு இருப்பதால், .LNK ஷார்ட்கட் ஃபைல்களை ஓபன் செய்ய வேண்டாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மைக்ரோசாஃப்ட் கூறுகையில், இந்த அச்சுறுத்தலின் செயல்பாட்டைக் கண்டறிந்து முடக்குவதற்கான வசதிகள் மைக்ரோசாஃப்ட் டிஃபென்டரிடம் உள்ளது. இணையத்திலிருந்து வரும் தீங்கிழைக்கக்கூடிய ஃபைல்களை முடக்கி கூடுதல் பாதுகாப்புக் கவசத்தை ஸ்மார்ட்ஆப் கட்டுப்பாடு வழங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டாலும், LNK ஃபைல்களை ஓபன் செய்யாமல் இருப்பது, விண்டோஸ் காண்பிக்கும் பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கைகளுக்குச் சரியான கவனம் செலுத்துவது பாதுகாப்பான முன்னெச்சரிக்கையாக அமையும்.