தொழில்நுட்பம்

வாழைப்பழத்தை உள்ளே வைத்து ராக்கெட்டை ஏவிய எலான் மஸ்க்: பின்னணி என்ன?

பூமியில் ஏவப்படும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடையும் தருணத்தை எளிதில் அடையாளம் காண, பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்கள் ராக்கெட்டுகளுக்குள் வைக்கப்படும்.

ராம் அப்பண்ணசாமி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்குள் வாழைப்பழம் வைக்கப்பட்டு, இன்று (நவ.20) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்கலன்களை விண்ணில் ஏவுவதற்காக சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது. ஒருமுறை விண்ணில் ஏவிய பிறகு, பூமிக்குக் கொண்டு வரப்பட்டு மறுசுழற்சி முறையில் மீண்டும் விண்ணில் ஏவப்படும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன.

கடந்த 20 ஏப்ரல் 2023-ல் ஸ்டார்ஷிப் ராக்கெட் முதல்முறையாக விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதள மையத்தில் வைத்து, 6-வது முறையாக இன்று ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது. இந்த ராக்கெட்டிற்குள் வாழைப்பழத்தை வைத்து ஏவியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பூமியில் புவியீர்ப்பு விசை உள்ளது, ஆனால் விண்வெளியில் இல்லை. எனவே பூமியில் ஏவப்படும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடையும் தருணத்தை எளிதில் அடையாளம் காண பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான பொருட்கள் ராக்கெட்டுகளுக்குள் வைக்கப்படும். இத்தகைய பொருட்கள் காற்றில் மிதப்பதை வைத்து, சம்மந்தப்பட்ட ராக்கெட் விண்வெளிக்குள் நுழைந்துள்ளது என்பது உறுதி செய்யப்படும்.

எனவே ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் அடையும் தருணத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ராக்கெட்டுக்குள் வாழைப்பழம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாபெரும் லட்சியத்தை அடைய இதைப் போன்ற சின்ன சின்னப் பொருட்கள் கூட உபயோகப்படும் என்பதை உணர்த்தும் வகையில் இது உள்ளது.