தொழில்நுட்பம்

ஜியோவுக்கு அடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல்

இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை 3 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

மொபைல் கட்டணங்களை உயர்த்துவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை 3 முதல் அமல்படுத்தப்படும் எனவும் ஏர்டெல் அறிவிப்பு. 10 % முதல் 21 % வரை இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ` நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிகத்தை உறுதிசெய்ய வாடிக்கையாளர் ஒருவருக்கு சராசரி வருவாயை 300 ரூபாய்க்கு மேல் பராமரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வு சிறந்த நெட்வொர்க் தொழில்நுட்பம் மற்றும் அலைவரிசையில் முதலீடு செய்ய உதவும்’ என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

`இந்தப் புதிய கட்டண உயர்வுகள் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தைக் குறைக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 70 பைசாவுக்கும் குறைவாக வகையில் மிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் திட்டத்தின் கட்டணம் ரூ. 199-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தற்போதைய கட்டணம் ரூ. 179-ஆக உள்ளது. இது போல ஒரு வருடத் திட்டத்தின் கட்டணம் ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதைப் போல, போஸ்டு பெய்டு திட்டங்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஏர்டெல் நிறுவனத்துக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோவும் ஜூலை 3 முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.