ANI
ANI
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் தேர்தல் நடத்தை விதிமீறல்: திமுக, சிபிஐ புகார்

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட், திமுக புகார் அளித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நேற்று வாகனப் பேரணி மேற்கொண்டார். சாய்பாபா கோயில் சிக்னல் அருகே தொடங்கிய இந்தப் பேரணியானது ஆர்.எஸ். புரம் தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணியின்போது சாலைகளின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் கூடியிருந்தார்கள். இதில் பள்ளி மாணவர்களும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. பிரசாரத்தின்போது அவர்களுக்கு பாஜக சார்ந்த உடை அணிவிக்கப்பட்டு, அவர்களது கையில் பாஜக கொடியைக் கொடுத்து நிற்கவைக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, பாஜகவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.