கோப்புப்படம் படம்: https://twitter.com/ereswaranoffl
தமிழ்நாடு

நாமக்கல்: கொமதேக வேட்பாளர் மாற்றம்

ஆணவக் கொலையை ஆதரித்துப் பேசுபவருக்குத் (சூரியமூர்த்தி) தேர்தலில் போட்டியிட வாய்ப்பா என விமர்சனங்கள் எழத் தொடங்கின.

கிழக்கு நியூஸ்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்திக்குப் பதில் மாதேஸ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (கொமதேக) நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொமதேக சார்பில் எஸ். சூரியமூர்த்தி போட்டியிடுவார் என மார்ச் 18-ல் அறிவிக்கப்பட்டது.

சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழைய நிகழ்ச்சியொன்றில் அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவத் தொடங்கின. அந்தப் பழைய நிகழ்ச்சியில் சூரியமூர்த்தி ஆணவக் கொலையை ஊக்குவிக்கும் வகையிலும், ஆதரிக்கும் வகையிலும் பேசியிருக்கிறார். ஆணவக் கொலையை ஆதரித்துப் பேசுபவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பா என விமர்சனங்கள் எழத் தொடங்கின.

இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். சூரியமூர்த்திக்குப் பதில் மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொமதேக மாவட்டச் செயலாளராக (நாமக்கல் தெற்கு) உள்ளார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவிய சர்ச்சைக் காணொளிக்கு சூரியமூர்த்தி தன்னிலை விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.