தமிழ்நாடு

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

ராம் அப்பண்ணசாமி

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் `மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேருகிறதா என்பதைக் கண்டறிய மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த திட்டத்தால் 12,500 கிராம ஊராட்சிகள் பலனடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரையின் சுருக்கம்:

`சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாகச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று பெயர் வைத்தோம். நிகழ்ச்சியில் பெரிய பெட்டிகளை வைத்து மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக வாங்கினோம். அதற்கு (இன்றைய) எதிர்க்கட்சிகள் நீங்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று கேலி பேசினார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கினேன். மக்கள் கொடுத்த மனுக்களில் நடைமுறைக்கு சாத்தியம் உள்ள 2,29,216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். அதற்குப் பிறகும் மக்களிடம் மனுக்களை வாங்கி, மக்களின் கோரிக்கைகளை தீர்க்க `முதல்வரின் முகவரி’ என்ற துறையை உருவாக்கினோம்.

மக்கள் அரசு அலுவலகத்துக்கு சென்று மனுக்களை அளிக்கும் நிலையை மாற்றி, நகரங்களில் நேரடியாகச் சென்று மக்களிடம் மனுக்களை வாங்கி அவற்றைப் பதிவு செய்து, 30 நாட்களில் தீர்வு காணப்பட்டது. அதுதான் மக்களுடன் முதல்வர் திட்டம். இந்த திட்டம் இன்று முதல் ஊரகப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது’.

இந்த விழாவில் மகளிர் பயணத்துக்காக புதிதாக 20 பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.