ANI
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைசட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தார்கள். தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தற்போது, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகத் தமிழக அரசு அறிவித்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்து, பிறகு அந்த உத்தரவை அவரே நிறுத்தி வைத்தார்.

தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோரும் மனுக்களைத் தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்குகிறோம் என்று கடந்த செப்டம்பர் 05 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல என்றும் கருத்து தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு அமைச்சர், அமைச்சரவையில் அமைச்சராகத் தொடர வேண்டுமா இல்லையா என்பதையெல்லாம் ஒரு மாநில முதல்வர் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆளுநரும் நீதிமன்றமும் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.