தமிழ்நாடு

என்ஐடி திருச்சியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி ரோஹிணி

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கூலி வேலை பார்த்துக் கொண்டே ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி உள்ளார் ரோஹிணி

ராம் அப்பண்ணசாமி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பழங்குடியின மாணவி ரோஹிணிக்கு என்ஐடி திருச்சியில் இளநிலை வேதியியல் பொறியியல் பாடப்பிரிவில் சேர இடம் கிடைத்துள்ளது. இதனால் என்ஐடி திருச்சியில் சேரும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையைப் பெறுகிறார் ரோஹிணி

இந்த வருடம் நடந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார் ரோஹிணி. இதை அடுத்து திருச்சி என்ஐடி.யில் வேதியியல் பொறியியல் பாடப்பிரிவில் ரோஹிணிக்கு இடம் கிடைத்துள்ளது.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற உதவிய தன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரோஹிணி. மேலும், `என் பட்டப்படிப்புக்கான முழு தொகையையும் செலுத்த முன்வந்த தமிழக அரசுக்கு நன்றி. எனக்கு உதவியதற்காக முதல்வருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார் ரோஹிணி.

திருச்சி மாவட்டத்தின் துறையூர் வட்டத்தில் உள்ள சின்ன இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஹிணியின் பெற்றோர் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கூலி வேலை பார்த்துக் கொண்டே ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி உள்ளார் ரோஹிணி.