பாதிக்கப்பட்ட இளம்பெண்
பாதிக்கப்பட்ட இளம்பெண் படம்: https://twitter.com/Neelam_Culture
தமிழ்நாடு

இளம்பெண் சித்ரவதை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

கிழக்கு நியூஸ்

வீட்டுப் பணிக்காக அழைத்து வரப்பட்ட இளம்பெண்ணைத் துன்புறுத்தி சித்ரவதை செய்த வழக்கில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள். வீட்டு வேலைக்காக உளுந்தூர்பேட்டையிலிருந்து பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளார்கள். கடந்த 6, 7 மாதங்களாக மெர்லினா தன்னை மிகக் கொடூரமாகத் துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். படிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்து வந்து துன்புறுத்தியிருக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியும், கடுமையாகத் தாக்கியும் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தீபாவளிப் பண்டிகையின்போது கூட பெண்ணை ஊருக்கு அனுப்பாத ஆண்டோ, மெர்லின் தம்பதியினர், பொங்கல் பண்டிகைக்காக இளம்பெண்ணின் தாயார் வைத்த வேண்டுகோளுக்கிணங்க அவரைக் கடந்த 15-ம் தேதி ஊரில் கொண்டு விட்டுள்ளார்கள்.

ஊருக்குச் சென்றவுடன் 15-ம் தேதி நள்ளிரவிலேயே உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் துன்புறுத்தல்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இவை திருவான்மியூரில் வைத்து நடந்ததால், கடந்த 17-ம் தேதி திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) முதல் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் மிகவும் பரவலாகக் கசியத் தொடங்கியது.

இந்த நிலையில், ஆண்டோ மற்றும் மெர்லினா மீது நீலாங்கரை காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.