தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி

ராம் அப்பண்ணசாமி

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பெரம்பூரில் அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி.

இன்று காலை டெல்லியில் இருந்து கிளம்பி தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த மாயாவதி, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் பந்தர் கார்டன் பள்ளிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்க்கும் முன்பு அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் சொன்னார் மாயாவதி. அப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அவரிடம் கேட்டறிந்தார். மாயாவதியுடன் அவரது மருமகனும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆகாஷ் ஆனந்தும் வருகை தந்தார்.

`ஆம்ஸ்ட்ராங் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்தவர். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திருக்கலாம். எனவே மாநில அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது’ என்று ஆம்ஸ்ட்ராங் உடல் அருகே நின்றபடி மைக்கில் பேசினார் மாயாவதி.

இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.