பிரபல ஒப்பனை கலைஞர் அஸ்மிதா அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவரும் யூடியூபருமான விஷ்ணு குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரபலமான ஒப்பனை கலைஞர்களில் ஒருவரான அஸ்மிதா, யூடியூபரும், இன்ஸ்டா பிரபலமுமான விஷ்ணு குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங்கில் சிலரை ஈடுபட வைத்து, அவர்களின் பணத்தை விஷ்ணு குமார் ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பாக அஸ்மிதா விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, தனது நண்பரின் தங்கையிடம் தவறான முறையில் விஷ்ணு குமார் குறுஞ் செய்திகளை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அது குறித்தும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மீண்டும் விஷ்ணு குமார் பிரச்னையில் சிக்கியுள்ளார். இந்த முறை மனைவி அஸ்மிதா அவர் மீது புகாரளித்துள்ளார்.
காவல்துறை ஏடிஜிபி ஒருவருக்கும், தனது மனைவிக்கும் தொடர்பிருப்பதாகவும், அவர் தவறான படங்களில் நடத்துள்ளதாகவும் அண்மையில் விஷ்ணு குமார் பேட்டி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பலரிடமும் கடன் பெற்று நஷ்டமடைந்த கணவர் விஷ்ணு குமார், போதைக்கு அடிமையாகி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஸ்மிதா புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல், சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது போன்ற பிரிவுகளின் கீழ் விஷ்ணு குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.