தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராக ரூ. 1 கோடி நஷ்டஈடு கோரி யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தான் நடத்தி வரும் சவுக்கு மீடியா ஆளும் கட்சியால் குறிவைக்கப்படுவதாக சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்தார். நேர்காணல் வெளியானவுடன், நேர்காணலில் பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக தமிழ்நாடு காவல் துறை சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில் இரண்டாவது குற்றவாளியாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு சேனலும் இணைக்கப்பட்டன. காவல் துறை விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டார்.
பத்திரிகையாளராக தனது உரிமைகளைப் பாதுகாக்க, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிடுமாறு மனுதாரர் பிரெஸ் கவுன்சிலை அணுகினார். பிரெஸ் கவுன்சில் நிர்வாகிகளைச் சந்திப்பதற்கான அனுமதி பெற்றிருந்ததால், தில்லியில் இருந்தார். இதன் காரணமாக, காவல் துறையினரின் அழைப்பாணைக்கு இணங்க முடியவில்லை.
பிரெஸ் கவுன்சில் தலைவரை மே 11,2024-ல் சந்திக்க அனுமதி இருந்ததால், தில்லியில் தங்கியிருந்ததை மேலும் இரு நாள்களுக்கு நீட்டித்தார். இருந்தபோதிலும், மே 11, 2024 அன்று இரவு 11.03 மணிக்கு தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் எதிர்பாராத விதமாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார். பிறகுதான், சவுக்கு சங்கர் அளித்த நேர்காணல் தொடர்புடைய வழக்கில் தான் கைது செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிய வந்தது.
முதல் தகவல் அறிக்கையின் நகல் கொடுக்கப்படவில்லை. என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரியபடுத்தப்படவில்லை. இது சட்ட உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். குடும்பத்தினரிடம் இவர் எங்கு உள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. 66 மணி நேரம் சட்டவிரோதமாக கைதில் வைக்கப்பட்டிருந்தார்.
தான் அனுபவித்த வலி, பாதிப்பு, அவமரியாதை மற்றும் புகழுக்குக் களங்கம் விளைவித்ததற்காக தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க அறிவுறுத்த வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை டிசம்பர் 16-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 31 அன்று ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனது யூடியூப் சேனலை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிறகு, யூடியூப் சேனலை மூடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.