தமிழ்நாடு

சிவகங்கை இளைஞர் மரணம்: லாக்அப் மரணம் என இபிஎஸ், அண்ணாமலை விமர்சனம்

"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கே இருக்கிறார்?"

கிழக்கு நியூஸ்

சிவகங்கையில் காவல் துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நிகிதா என்ற பெண் மற்றும் அவருடைய தாயார் மதுரையிலிருந்து காரில் வந்துள்ளார்கள். இருவரும் கோயிலில் வழிபட்டு காருக்கு திரும்பியுள்ளார்கள். அப்போது காரிலிருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனது இவர்களுக்குத் தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து, திருப்புவனம் காவல் துறையிடம் புகார் அளிக்கப்படுகிறது.

பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாவலராகப் பணியாற்றி வருபவர் இளைஞர் அஜித் குமார். இவர் நிகிதா மற்றும் அவருடைய தாயாருக்கு உதவியிருக்கிறார். காரை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு அஜித் குமாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனவே, நகை காணாமல் போனதற்கு இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்புவனம் காவல் துறையினர் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். சனிக்கிழமையன்று விசாரணையின்போது அஜித் குமார் சுயநினைவை இழந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். காவலர்களின் துன்புறுத்தலால் அஜித் குமார் உயிரிழந்ததாக அஜித் குமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மற்றும் காவல் துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள். பதற்றத்தைத் தணிப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் 6 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்தைக் கண்டித்து, "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கே இருக்கிறார்?" என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 முதல் 23 பேர் காவல் துறை விசாரணையில் உயிரிழந்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை விமர்சித்துள்ளதாவது: