மின்தடையால் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: வொண்டர்லா நிர்வாக இயக்குநர் அருண் 
தமிழ்நாடு

வொண்டர்லாவில் மின் தடையால் பாதியில் நின்ற சவாரிகள்: மன்னிப்பு கோரிய நிர்வாக இயக்குநர் | Wonderla |

சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் நிலைமைப் பெரிதுபடுத்தும் வகையில் உள்ளன...

கிழக்கு நியூஸ்

வொண்டர்லாவில் மின்தடையால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அதன் நிர்வாக இயக்குநர் காணொளி வெளியிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவைக் கடந்த டிசம்பர் 1 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ. 611 கோடி மதிப்பீட்டில் 43 உலகத்தர சவாரிகளுடன் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்கா, நாளொன்றுக்கு 6,500 பார்வையாளர்கள் வருகை தரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது நேற்று (டிச. 2) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பலர் ஆர்வமாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கு நேற்று வருகை தந்தனர். ஆனால் பூங்காவில் சில சவாரிகள் இயங்காமல் இருந்துள்ளது. மேலும், சில சவாரிகள் பாதியிலேயே நின்றன. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், சவாரிகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வொண்டர்லா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிப்பில்லி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் முதல் நாளான நேற்று, புயலுக்கு மத்தியிலும் 2000 பேர் வருகை தந்தார்கள். நல்ல வரவேற்பு அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால், முதல் நாள் என்பதாலும், மாறுபட்ட வானிலை காரணத்தாலும் சில நேரங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சில சவாரிகள் பாதியிலேயே நிற்கும் நிலை ஆனது. உடனே துரிதமாகச் செயல்பட்ட எங்கள் தொழில்நுட்பக் குழுவினர் அவற்றைச் சீர் செய்தனர். ஆனால் தடங்கல் ஏற்பட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று ஏற்பட்ட சிறு கோளாறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நேற்றைய சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க எங்கள் வலைத்தள முகவரி மூலம் அணுக வேண்டுகிறேன். சென்னை வொண்டர்லாவில் நிறுவப்படுள்ள அனைத்து பொழுதுபோக்கு சவாரிகளும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறேன். இவை எல்லாம் வழக்கமான முதல்நாள் பிரச்னைகள் மட்டுமே என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் நிலைமைப் பெரிதுபடுத்தும் வகையில் உள்ளன. வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா பாதுகாப்பானது என்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறேன். நாங்கள் 25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறோம். சுமார் 5 கோடிக்கும் மேலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளோம்” என்றார்.

Wonderla's managing director has released a video expressing his regret and apology for the disruption caused in the rides due to power outage