தமிழ்நாடு

நள்ளிரவில் ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்: நடந்தது என்ன?

இது தொடர்பாக கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தும் வகையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்கள் துரத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக வழக்குப் பதிந்து பலன் விசாரணையைத் தொடங்கியுள்ளது காவல்துறை.

சென்னையின் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பெண்கள் சிலர் குடும்பமாக காரில் சென்றுள்ளனர். அப்போது அந்தக் காரை தடுத்து நிறுத்தி வழிமறித்துள்ளார்கள் திமுக கொடி பொருத்திய சஃபாரி காரில் இருந்த இளைஞர்கள். இதனை அடுத்து வழிமறித்த காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர், பெண்களை காரில் இருந்து இறங்குமாறு மிரட்டியுள்ளார்.

அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிச்செல்லும் வகையில் பெண்கள் இருந்த கார் நீண்ட தூரம் பின்நோக்கி இயக்கப்பட்டது. இந்த முழு சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

சம்பவம் நடந்த நாளன்று வழிமறிக்கப்பட்ட பெண்களின் காருக்குள் இருந்த கானத்தூர் (செங்கல்பட்டு) பகுதியைச் சேர்ந்த சின்னி திலங்க் என்பவர், இந்த விவகாரம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜன.25-ல் இரவு நேரத்தில் ஈசிஆர் முட்டுக்காடு பாலம் அருகே சஃபாரி கார் மற்றும் வேறு ஒரு காரில் வந்த 7-8 இளைஞர்கள் தங்களை அச்சுறுத்தியதாகவும், கானத்தூரில் உள்ள தங்களது வீடு வரை பின்தொடர்ந்து வந்து மிரட்டிச் சென்றதாகவும் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார் சின்னி திலங்க்.

இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான புலன் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக, குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும், ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.