துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் கொண்டுவரும் வகையில் வெளியான யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் அதிமுக ஆதரவுடன் நிறைவேறியது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடைமுறைப்படுத்தவுள்ள புதிய விதிகள் குறித்த வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதன்படி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர் (வேந்தர்) அமைப்பார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் துணைவேந்தர் தேடுதல் குழுவில் இனி மாநில அரசு நியமிக்கும் உறுப்பினர் இடம்பெற முடியாது என்பது உறுதியானது. மேலும், கல்வி சாராத தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த வல்லுனர்கள் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் யுஜிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன.9) தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்ந்து வருவது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாகக் கல்வித்துறையில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. நீட் தேர்வு மூலம் மருத்துவக் கனவை சிதைக்கும் காரியத்தைப் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இதேபோல பல்கலைக்கழகங்களை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை இனி ஆளுநரே தீர்மானிப்பார் என யுஜிசி விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் கையில் கொடுப்பது பல்கலைக்கழகங்களை சிதைக்கும் காரியமாகவே முடியும்’ என்றார்.
முதல்வரின் தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.