தமிழ்நாடு

திராவிடம், தமிழ் தேசியத்தை விளக்குவாரா?: விஜயை மீண்டும் சீண்டும் சீமான்

தம்பி என்கிற உறவு வேறு. பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும் எங்கள் கொள்கைக்கு எதிராக நின்றால் எதிரி எதிரிதான்.

ராம் அப்பண்ணசாமி

திராவிடம் என்றால் என்ன, தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் கூறுவாரா என மீண்டும் விஜயை விமர்சித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று (நவ.2) செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியவை பின்வருமாறு,

`பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சிலே குண்டுகள் வாங்கி மரணித்தபோது பதறித் துடித்தது தமிழ் தேசியம், அதே நேரம் சிறிதும் பதற்றமில்லாமல் பதவியேற்றது திராவிடம். இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்னு கண்ணு என்கிறார். அதை எவ்வாறு சமம் என்று கூறலாம். அடுத்தவன் மொழி எவ்வாறு என்னுடைய கொள்கை மொழியாக இருக்க முடியும்?

விரும்பினால் எம்மொழியும் கற்போம். உலக மொழிகளுக்கு எல்லாம் நாங்கள் பற்றாளர்கள். ஆனால் எங்கள் மொழிக்கு நாங்கள் உயிரானவர்கள். திராவிடம் என்றால் என்ன, தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கான விளக்கத்தை யார் கூறுவார். தலைவரா? அல்லது கீழே இருக்கும் தம்பிகளா, தங்கைகளா?

மதச்சார்பற்ற சமூகநீதி என்றால் என்ன? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா இல்லையா? அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா இல்லையா?.

தம்பி என்கிற உறவு வேறு, கொள்கையில் எதிரி வேறு. பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும் எங்கள் கொள்கைக்கு எதிராக நின்றால் எதிரி எதிரிதான். குடும்ப உறவைவிட கொள்கை உறவு மேலானது. பாஜக மதவாதம் என்றால், காங்கிரஸ் மிதவாதமா? சாதி, மதம், மொழி, இனம், பாலினம் என பிரிக்கிறார்கள் என்கிறீர்கள். மொழியும் இனமும் ஒன்றா?

சாதியையும் மதத்தையும், மொழி இனத்துடன் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம். ஒன்று கொள்கையை மாற்றவேண்டும் அல்லது எழுதிக்கொடுத்தவனை மாற்றவேண்டும். இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆளுநர் வேண்டாம் என்கிறீர்கள். ஏன் வேண்டாம் என்பதை விளக்க வேண்டும்.

திராவிடமும், தமிழ் தேசியமும் தேவை என்பது தவறாக இருக்கிறது. லட்சக்கணக்கான உன் இன மக்கள் கொல்லப்பட்டது குறித்த உன் கருத்து என்ன? என்னைவிட முதிர்ந்த, அரசியல் அனுபவம் மிக்க அண்ணன் (திருமாவளவன்) அவருடன் கூட்டணி வைக்கும் தவறை செய்யமாட்டார்’ என்றார்.