மூன்றாண்டுகளாக செல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (மே 25) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
`தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்றாண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களை ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிதி ஆயோக் கூட்டங்களை அவர் புறக்கணித்தார்.
ஆனால் நேற்றைய தினம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்பதெல்லாம், ஏன் மூன்றாண்டு காலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுதான்.
அந்த மூன்றாண்டு காலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெற்றிருக்கலாம். உரிய திட்டங்களுக்கான அனுமதியை பெற்றிருக்கலாம். மாநில அளவிலான பிரச்னைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம்.
ஆனால் (அவர்) மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் என்பது, இதன்மூலம் தெரிய வருகிறது. திமுக ஆட்சியில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆகையால் பயந்துபோய் தில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதல்வர் ஸ்டாலின் வெள்ளைக் கொடி பிடித்திருக்கின்றார். இதன்மூலம் திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என்பது வெளிப்படையாக தெரிகிறது. பிரதமரை சந்திக்கும் அவசியம் எப்போது ஏன் வந்தது?
ஏனென்றால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பதன் அடிப்படையில்தான் பிரதமரை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது. அவர் (முதல்வர்) சொன்ன காரணம் வெளியே வந்துள்ளது. ஆனால் பிரதமர் கூறினால்தான் உண்மை என்னவென்று தெரியும்’ என்றார்.