ANI
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வராதது ஏன்?: அண்ணாமலை கேள்வி

யாரெல்லாம் தற்போது அபாய கட்டத்தில் இருக்கிறார்களோ அவர்கள் 2-3 நாட்களாக குடித்திருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: அவர் பேசியது பின்வருமாறு:

`கள்ளச்சாராயமும் திமுகவின் அடிமட்டத்தலைவர்களுக்கும் பிணைப்பு உள்ளது. மாவட்டத் தலைநகரின் மையப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

யாரெல்லாம் தற்போது அபாய கட்டத்தில் இருக்கிறார்களோ அவர்கள் 2-3 நாட்களாக குடித்திருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது என விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். எனவே ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இது நடந்ததாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக பல இடங்களிலும் கள்ளச்சாராயம் இது புழங்கியுள்ளது.

இதனால் நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சி.பி.ஐ விசாரணை கோருகிறேன். கடந்த முறை செங்கல்பட்டு, மரக்காணம் போன்ற இடங்களில் இது போல நடந்தபோதே, அதில் குற்றம்சாட்டப்பட்ட மருவூர் ராஜாவுக்கும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என புகைப்படம் ஆதாரத்துடன் நாங்கள் தெரிவித்தோம்.

கடந்த முறை இதுதான் கடைசி மரணம் என முதல்வர் தெரிவித்தார்கள், ஆனால் இன்று இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் குறைந்தபட்சம் தார்மீக அடிப்படையில் மதுவிலக்கு அமைச்சராக உள்ள முத்துசாமி பதவி விலக வேண்டும்.

2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் வருடாவருடம் டாஸ்மாக்கின் வருமானம் 18-22 சதவீதம் அளவுக்கு உயர்ந்து கொண்டுவருகிறது. எனவே உயிரிழந்த நபர்களுக்கு மதிப்பளித்து நாளை முதல்வர் ஸ்டாலின் 1000 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

முதலமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுத்து இங்கே வந்து பார்க்க வேண்டும், ஆனால் அவர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு தனி மனிதனின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முதல் கடமை. எனவே குடும்ப அரசியல் செய்யாமல், முதல்வர் இங்கே வரவேண்டும். பாஜக சார்பில் உதவிகளை பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு செய்வோம்’.