தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதி விலகியதன் பின்னணி என்ன?

உரிமையியல் வழக்குகளை வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிடுமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

ராம் அப்பண்ணசாமி

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோ. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.

கடந்த 5 டிசம்பர் 2016-ல் அன்றைய தமிழக முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து, 2021-ல் நடந்த தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதன் பிறகு 11 ஜூலை 2022-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், கட்சி விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், 11 ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானங்களை எதிர்த்தும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் கடந்த 2022-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இந்த உரிமையியல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோ. ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தன. 11 ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக கடந்த 2022-ல் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இன்று நடந்த விசாரணையில் இதை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த உரிமையியல் வழக்குகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்குகளை வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிடுமாறு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரைத்தார்.