தமிழ்நாடு

எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்?: முதல்வர் ஸ்டாலின்

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசியல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் அளித்த விளக்கம் பின்வருமாறு:

`தேர்தல் தோல்வியை மறைக்க எடப்பாடி பழனிசாமி போட்ட சதித் திட்டம்தான் நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்பியது. கடந்த 19-ல் இதைக் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அந்த சம்பவம் குறித்து ஜூன் 20-ல் முழுமையான அறிக்கையை இந்த அவையில் தாக்கல் செய்தேன்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டேன். குற்றவாளிகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கொண்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தும், நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது அவர் (எடப்பாடி பழனிசாமி) நடத்தும் திசை திருப்பல் நாடகம். எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்?

சாத்தான்குளம் சம்பத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு சிபிஐ விசாரணை கேட்கிறீர்களே என்று அப்போது (முதல்வராக இருந்த) பழனிசாமி பேட்டியளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்துபோனால் இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பதில்லை. ஒரே ஒருவர் இழந்தாலும் அது மாபெரும் இழப்புதான்.

சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது, அதனால் அப்போது சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு  எதையும் மறைக்கவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஒருவர் கூட தப்ப முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்'.