கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். என். ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் காவல் துறையினரின் வழக்குப்பதிவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் எம்.பி. விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது:
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதைவிட, அவர்களுக்கான துயரத்தை, துக்கத்தைப் பகிர்ந்துகொள்வதைவிட, எப்படி இதை அடுத்தவர் மீது பழிபோடலாம், இதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதில் விஜயும் குறியாக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அதற்காக (கரூர் சம்பவத்துக்காக) அவர் துளியும் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அவருக்குக் குற்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சம்கூட கவலைப்படாத நிலையில், ஆட்சியாளர்கள் மீது பழியைப்போட நினைக்கிறார் என்றால் அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியிருக்கிறார் என்று எண்ணும்போது பெரும் கவலையளிக்கிறது.
இதுபோன்ற சக்திகளிடம் தமிழ்நாடு மக்கள் சிக்கிக்கொண்டால் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற அச்சமும் எழுகிறது.
தமிழ்நாடு காவல் துறை இதில் காட்டும் மெத்தனம் உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது. இதில் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறதோ, அந்த முகாந்திரம் விஜய்-க்கு இல்லையா? புஸ்ஸி ஆனந்தோடு இருக்கிற மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்போது, மற்றொருவர் அருண் ராஜ் என்று கருதுகிறேன். அவரும் உடனிருந்து இந்தச் செயல்திட்டங்களையெல்லாம் வகுத்துக்கொடுத்தவர் தான். அவர் (அருண் ராஜ்) மீது ஏன் இன்னும் வழக்குத் தொடுக்கவில்லை? நீங்கள் சொன்னதைப்போல ஆதவ் அர்ஜுனா மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.
தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா? தமிழ்நாடு காவல் துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்போடுவதில்லை இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா?
காவல் துறையின் அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்? எல்லோரும் சமம் என்று பார்க்கும்போது அந்தக் கட்சியில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் அல்லது அலட்சியமாக இருந்தவர்கள்... இந்த உயிரிழப்புக்குக் காரணமான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள், காலதாமதம் செய்தவர்கள், வேண்டுமென்றே காலதாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தான் வருகிறார். அவர் மீது வழக்குத் தொடுக்க தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.
பாஜகவைக் கொள்கை எதிரி என்று விஜய் கூறிய பிறகு, பாஜக எதற்காக அவருக்கு (விஜய்) முட்டுகொடுக்கிறார்கள். பாஜகவினர் ஏன் விஜயைத் தாங்கிப்பிடிக்கிறார்கள். பாஜகவைக் கொள்கை எதிரி என நான் அறிவிக்கிறேன். எனக்கு அவர்கள் (பாஜக) ஆதரவு தெரிவிப்பார்களா? எதிரி என்று அவர் (விஜய்) அறிவித்தபிறகு, பாஜகவுக்கு அங்கு என்ன வேலை? பாஜக ஏன் ஓடி வந்து நிற்கிறார்கள்?
தன்னைக் கொள்கை எதிரி என்று சொல்லிக்கொள் என பாஜகவினர் சொல்லிக்கொடுத்தார்கள், விஜய் சொன்னார்.
திமுகவை முதல் எதிரியாகச் சொல்ல வேண்டும், அது தேர்தல் அரசியல் எதிரியாக இருக்கட்டும் என்று விஜய்-க்கு சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. கொள்கை எதிரி என தன்னைச் சொல்லிக்கொள், ஆனால் விமர்சனம் செய்ய வேண்டாம் என பாஜக சொல்லிக்கொடுத்துள்ளது. இப்படி பல பேரை தமிழ்நாட்டில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
இது பாஜகவின் சூது, சூழ்ச்சி. தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக அவர்களால் கால் ஊன்ற முடியவில்லை. என்னென்னமோ பகிரங்க முயற்சிகளை மேற்கொண்டு பார்க்கிறார்கள், முடியவில்லை. இரு பெரும் தலைவர்கள் இல்லை என்கிற நிலையில், எப்படியாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். விசிக இருக்கும் வரை, அவர்களால் இதுபோன்ற எந்த சூது, சூழ்ச்சியையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாது" என்றார் திருமாவளவன்.
Thirumavalavan | TVK Vijay | Karur | Karur Stampede | Vijay |