தமிழ்நாடு

எதனால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்தவில்லை?: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

ஜனவரி 6 காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6-ல் தொடங்கும் என அறிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி எதனால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்தவில்லை என்பதற்கு விளக்கமளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.20) செய்தியாளர்களைச் சந்தித்தது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பேசியவை பின்வருமாறு,

`இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174(1)-ன் கீழ் தமிழக சட்டப்பேரவையை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வரும் ஜனவரி 6-ல் கூட்டியுள்ளார் மேதகு தமிழக ஆளுநர்.

அன்று காலை 9.30 மணிக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 176(1)-ன் கீழ் மேதகு தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார்.

அதன்பிறகு, `சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டுக்கு 100 நாட்கள் நடைபெறும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்' என செய்தியாளர் ஒருவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அப்பாவு, `2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு காலத்தில் குளிர்கால கூட்டத்தொடர்கள் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்துள்ளன. அதற்குக் காரணம், இந்த கூட்டத்தொடரில் கூடுதல் செலவினத்திற்கான மசோதாவை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதைப் பற்றி பெரிய அளவில் பேசும் வகையில் விவாதம் இருக்காது.

அதிலும் குறிப்பாக 2011 முதல் 2021 வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது கூடுதல் நேரம் ஏற்பட்டாலும் மசோதாக்களை விவாதம் நடத்தி நிறைவேற்றுமாறு முதல்வர் கூறியுள்ளார்.

தேர்தல், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் பேரவையை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை. ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவையை நடத்தவேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் சட்டப்பேரவை குறைந்த நாட்கள் நடந்தாலும், மக்கள் பணிகளில் எந்தக் குறையும் இல்லை’ என்றார்.