தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் `அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்டிருந்த பேட்ஜ் அணிந்து இன்று வருகை தந்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து சில அதிமுக எம்.எல்.ஏ.க்களை இன்று ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் முதல் வாரத்தில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், சில தனியார் மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்கள். சோதனையின் முடிவில் ரூ. 1,000 கோடி வரை டாஸ்மாக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க வந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், `அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். மேலும், சில எம்.எல்.ஏ.க்கள் `ரூ. 1000 கோடி ஊழல் – டாஸ்மாக் ஊழலுக்கு பின்னணியில் யார்?’ `டாஸ்மாக் ஊழலுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் மாடல் அரசே பதவி விலகு’ போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்ட நிலையில், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து, பதாதைகளை ஏந்தியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை இன்று ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற விதிகளின்படி பேட்ஜ் அணிந்து, பதாதைகளை ஏந்தி இனி சட்டப்பேரவைக்குள் வருகை தர எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டாலும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார்.