சென்னையிலிருந்து 700 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. படம்: https://x.com/ChennaiRmc
தமிழ்நாடு

புயல் என்ன செய்யப்போகிறது?: வானிலை ஆய்வு மையம் விளக்கம் | Cyclone Ditwah |

சென்னையிலிருந்து 700 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் குறித்து மழை பாதிப்பு உள்பட பல்வேறு தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா கூறியதாவது:

"தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய இலங்கைக் கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்று புதுவையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 610 கீ.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இப்புயலுக்கு டித்வா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30 அன்று அதிகாலை வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இந்தப் புயலின் காரணமாக, அடுத்த 4 நாள்களுக்கு மழை குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மிதமான மழையிலிருந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 28 அன்று 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன முதல் மிகக் கனமழை மற்றும் சில இடங்களில் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன முதல் மிகக் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29 அன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களுக்கு கன முதல் அதி கனமழையும் சில கடலோர மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

புயல் மையமிட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 60 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் புயலின் மையப்பகுதியைவிட்டு வெளிப்புறப் பகுதிகளில் மணிக்க 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

அதேபோல அரபிக் கடல் பகுதிகளிலும் கேரள, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் தெற்கு வங்கக் கடல் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

புயலுடன் கூடிய தரைக்காற்றானது இரு நாள்களுக்கு கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாள்கள் நவம்பர் 27, நவம்பர் 28 ஆகிய நாள்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றார் அமுதா.

மேலும், புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது அடுத்தடுத்த நாள்களில் தெரியவரும் என அமுதா தெரிவித்தார்.

Where is Cyclone Ditwah expected to make landfall?

Cyclone Ditwah | Cyclone | Bay of Bengal |